மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
12. திருச்சாழல் |
தில்லையில் அருளியது |
சிவனுடைய காருணியம் |
தரவு கொச்சகக் கலிப்பா |
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதுந் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. |
1 |
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. |
2 |
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. |
3 |
அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. |
4 |
தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ. |
5 |
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. |
6 |
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாயந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. |
7 |
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவர்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. |
8 |
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய்இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. |
9 |
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. |
10 |
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. |
11 |
கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. |
12 |
மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. |
13 |
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடி
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டங்காண் சாழலோ. |
14 |
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. |
15 |
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ. |
16 |
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையுந் தேனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. |
17 |
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. |
18 |
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. |
19 |
அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. |
20 |
திருச்சிற்றம்பலம் |